பண்ருட்டி : பண்ருட்டி அருகே, ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த துண்டிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த பழுதால், ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதா என்பது குறித்து, ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விபத்து தவிர்ப்பு
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் மனைவி மஞ்சு, 25; ரயில்வே ஒப்பந்த தொழிலாளி.
இவர், நேற்று காலை அக்கடவல்லி கிராமம் வழியாக செல்லும் விழுப்புரம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் தண்டவாளம் உடைந்திருப்பதை பார்த்தார்.
உடன் மஞ்சு அளித்த தகவலின்படி, காலை 7:15 மணிக்கு, அவ்வழியாக செல்ல இருந்த திருச்செந்துார் - சென்னை எழும்பூர் ரயில், உடனடியாக திருத்துறையூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடலுார் ரயில்வே பாதுகாப்பு போலீசார் அக்கடவல்லி கிராமத்துக்கு விரைந்து, தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பு குறித்து விசாரணை நடத்தினர்.
குறைந்த வேகம்
ரயிலை கவிழ்க்க யாராவது சதி செய்தனரா என்பது குறித்து கடலுார் ரயில்வே பாதுகாப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ரயில்வே அதிகாரிகள் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து, குறைந்த வேகத்தில் திருச்செந்துார் - சென்னை ரயில் இயக்கப்பட்டு, காலை 8:00 மணிக்கு, அக்கடவல்லி கிராமத்தை கடந்து சென்றது.
தொடர்ந்து, சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ரயில், விழுப்புரத்தில் இருந்து மாயவரம் செல்லும் ரயில் ஆகியவையும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
பின், பழுது ஏற்பட்ட தண்டவாளத்தின் பாகம் அகற்றப்பட்டு, புதிய தண்டவாளம் பொருத்தி இணைக்கும் பணிகள் துவங்கின.
இந்த பணிகள் மதியம் 2:30 மணிக்கு நிறைவடைந்தன.
இதையடுத்து, அவ்வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் வழக்கம் போல இயக்கப்பட்டன.
அக்கடவல்லி கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை பார்த்த மஞ்சு, சேர்ந்தனுாரைச் சேர்ந்த தன் அக்கா சத்யாவிற்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். சத்யா, சேர்ந்தனுார் போலீசாருக்கு விபரத்தை தெரிவித்தார்.தொடர்ந்து, போலீசார், பண்ருட்டி ரயில் நிலையம், திருத்துறையூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால், திருச்செந்துார் - சென்னை ரயில் விபத்தில் இருந்து தப்பியது. ரயில்வே ஒப்பந்த தொழிலாளி மஞ்சுவை, ரயில்வே அதிகாரிகளும், போலீசாரும் பாராட்டினர்.