கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது, ஜெயேந்திர சரஸ்வதி நகர். இங்கு, 16 தெருக்கள் உள்ளன.
இங்கு, தனி நபர் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என, 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள 16 தெருக்களுக்கும், சாலைகள் முறையாக போடப்படவில்லை.
சாலை வசதி இல்லாமல், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், தற்போது உள்ள சாலைகள் குண்டும், குழியுமாகவும், சகதியாகவும் உள்ளது.
இதில், இருசக்கர வாகனத்தில் செல்லவும், நடந்து செல்லவும் முடியாதபடி, இப்பகுதி வாழ் மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதியில் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், பலமுறை காரணைப்புதுச்சேரி ஊராட்சி தலைவருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் மனு அளித்தும், இதுவரை எந்த விதமான வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என, புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்போர் நல சங்கத்தை சேர்ந்த ஆர்.வெங்கடேஸ்வரன், 73, என்பவர் கூறியதாவது:
நான், இந்த பகுதியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் குடியேறினேன். அன்றிலிருந்து இன்று வரை, இங்கு சாலைகள் போட்டு தரப்படவில்லை.
தெரு விளக்குகள் இல்லை. கழிவு நீர் கால்வாய் இல்லை. ஆனால், பல முறை புகார் தெரிவித்தும், இதுவரை எங்கள் பகுதிக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
மழைக்காலத்தில், நாங்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறோம். மேலும், இங்கு தெரு விளக்குகள் இல்லாததால், ஆறு மணிக்கு மேல், பெண்கள் மற்றும் வயதானோர் வெளியே வர அச்சப்படுகின்றனர்.
எனவே, எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.