கள்ளக்குறிச்சி : 'கனியாமூர் சக்தி பள்ளிக்கு இழப்பீடாக 20 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும்' என தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி பள்ளியை திறப்பதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். கலவரத்தின் போது பள்ளி கட்டங்களை சேதப்படுத்தி அனைத்து பொருட்டுகள் தீ வைத்து எரித்துள்ளனர்.
அதேபோல, காவல் துறையின் 60 வாகனங்கள், 43 பள்ளி வாகனங்களும் தீ வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிக்கு 30 கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளியில் ரூ.10 கோடி செலவு செய்து புனரமைத்து 9 - 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து எல்.கே.ஜி., முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு துவங்க தமிழக அரசும், நீதிமன்றமும் உடனடியாக அனுமதி வழங்கும் என்று நம்புகிறோம்.
ஆன்லைன் வகுப்புகள் தவிர்த்து நேரடி வகுப்புகள் நடத்தினால் மட்டுமே மாணவர்களின் கல்வி தரம் உயரும்.
தமிழக அரசு சக்தி பள்ளிக்கு இழப்பீடாக 20 கோடி ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி விடுதிக்கான அனுமதியை மாவட்ட கலெக்டர் வழங்கவேண்டும். தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு பள்ளிக்கும் விடுதி அனுமதி வழங்கவில்லை. இச்சம்பவத்திற்கு பிறகு விடுதிக்கான அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
உயிரிழந்த பள்ளி மாணவி ஸ்ரீமதியின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி பிறகே பள்ளி துவங்கியது. தனியார் பள்ளியில் அனைத்து குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.