தஞ்சாவூர் : நெல், 100 கிலோவுக்கு, 2,660 ரூபாய் விலை அறிவித்த சத்தீஸ்கர் மாநில காங்., முதல்வரை நேரில் பாராட்ட, தமிழகத்தில் இருந்து, 15 விவசாயிகள் நேற்று அம்மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
மேலும், 1,000 கிலோ கரும்புக்கு, 4,000 ரூபாயை விலையாகவும் அறிவித்தார். அவரை சந்திக்க, தமிழக விவசாயிகள் அனுமதி கேட்டிருந்தனர். அதன்படி, இன்று மாலை அவர்கள் முதல்வரை சந்திக்க உள்ளனர்.
இதை முன்னிட்டு, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர் விமல்நாதன் தலைமையில், மூன்று பெண் விவசாயிகள் உட்பட, 15 பேர், நேற்று காலை ரயிலில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டனர்.
விமல்நாதன் கூறியதாவது:
தமிழகத்தில், நெல் குவிண்டாலுக்கு, 2,065; கரும்பு டன் ஒன்றுக்கு, 2,925 ரூபாயும் வழங்கப்படுகிறது.
ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளார். விவசாய இடுபொருட்கள் வாங்க ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
இது தவிர, நெல் கொள்முதலில் சத்தீஸ்கர் மாநிலம், இந்த ஆண்டு, 98 லட்சம் டன் நெல் உற்பத்தியை இலக்காகக் கொண்டு, வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அவரை பாராட்டும் விதமாக, தமிழக பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி, சீரக சம்பா, துாயமல்லி, மாப்பிள்ளை சம்பா நெற்கதிர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிவிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.