விக்கிரவாண்டி : முண்டியம்பாக்கம் ரயில் நிலைய 'கூட்ஸ் யார்டில்' நின்றிருந்த ரயில் பெட்டி மீது ஏறி விளையாடிய மாணவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 38, என்பவர் மகன் கோகுல், 15; முண்டியம்பாக்கம் அரசு உயர் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு தன் பள்ளி நண்பர்களுடன் ரயில் நிலைத்தில் உள்ள, கூட்ஸ் யார்டு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, காலியாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டி மீது ஏறி விளையாடியபோது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் மின்னழுத்த மின் கம்பியில் கை பட்டதால், பலத்த தீக்காயங்களுடன் துாக்கி வீசப்பட்டார்.
உடன், சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.
இதுகுறித்து திண்டிவனம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.