கும்மிடிப்பூண்டி : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, நேற்று அதிகாலை டேங்கர் லாரியும், ஆம்னி பேருந்தும் மோதிய கோர விபத்தில், நான்கு பேர் உயிரிழந்தனர்; மேலும் மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கவரைப்பேட்டையில் இருந்து பாடியநல்லுாருக்கு, 'லிப்ட்' கேட்டு, பஸ் படி அருகே நின்றபடியே, கும்மிடிப்பூண்டி அடுத்த, தண்டலச்சேரியைச் சேர்ந்த, மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து டிரைவர் ஜானகிராமன், 41, என்பவர் பயணித்தார்.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அடுத்த, தச்சூர் மேம்பாலத்தில், முன்னால் சென்று கொண்டிருந்த 'அசோக் லேலண்ட்' காலி டேங்கர் லாரி மீது, ஆம்னி பேருந்து அதிகாலை 5:45 மணியளவில் எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் டேங்கர் லாரி, சாலையில் கவிழ்ந்தது. ஆம்னி பேருந்தின் இடது புறம் முற்றிலும் உருக்குலைந்தது.
பேருந்தின் இடதுபுற இருக்கையில் அமர்ந்து இருந்தவர்கள், இடிபாடுகளுக்கு இடையே சிக்கினர். கவரைப்பேட்டை போலீசார் மற்றும் பொன்னேரி தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பெங்களூரைச் சேர்ந்த தும்மல ரோகித் பிரசாத், 23, நெல்லுாரைச் சேர்ந்த தொக்கல சதிஷ்குமார், 27, கிளீனர் ஸ்ரீதர், 24, ஆகிய மூன்று பேர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜானகிராமன், அங்கு சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.
மேலும், முன் இருக்கையில் பயணித்த, சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாஸ்ரீ, 58; விஷ்ணுபிரியா, 25; பெசன்ட் நகரைச் சேர்ந்த சாய்பவன், 21, ஆகிய மூவரும் படுகாயங்களுடன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.டேங்கர் லாரி ஓட்டுனர் சுப்பா ராவ், 51 மற்றும் ஆம்னி பேருந்து டிரைவர் கிஷோர், 42, ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.