குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் பாதையில், மீண்டும் தொடர் மண்சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், அந்தரத்தில் பாறைகள் உள்ளதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது .
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைபாதையில், வாகனங்கள் சென்று கொண்டிருந்த போதே, மரப்பாலம் அருகே ராட்சத பாறைகளுடன், மண் சரிவும் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதித்தது.நேற்று காலை, இதன் அருகில் மீண்டும், மண் சரிவுடன் சிறிய கற்கள் விழுந்தன.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், இந்த இடத்தில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. இங்கு அந்தரத்தில் பாறைகள் உள்ளதால் மழை பெய்யும் போது, மீண்டும் பெரியளவில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலை துறை சேலம் கோட்ட கோபி கோட்ட பொறியாளர் செல்வம்,, ஊட்டி உதவி கோட்ட பொறியாளர் சங்கர் ஆய்வு செய்து கூறுகையில், " அந்தரத்தில் பாறைகள் உள்ளதை வாகனங்கள் நிறுத்தி அகற்றப்படும்.
கடந்த 1994 ம் ஆண்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்ட இந்த இடத்தில் மழை நீர் தடத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படும். இதனை ஆய்வு செய்து சரிசெய்யப்படும், அபாயகரமான மரங்கள் அகற்றப்படும்," என்றனர்.