காஞ்சிபுரம், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவ-- மாணவியரிடையே கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 52 மேல்நிலைப்பள்ளிகள், 50 உயர்நிலைப்பள்ளிகள், 116 நடுநிலைப்பள்ளிகள் என, 218 பள்ளிகளில், 46 ஆயிரத்து, 191 பேர் பள்ளி அளவில் கலைப்போட்டிகளில் பங்கேற்றனர். பள்ளி அளவிலான போட்டிகள், கடந்த நவம்பர் மாதம் 23 முதல் 28ம் தேதி வரை நடந்தது.
பள்ளி அளவில் வெற்றி பெற்ற, 19 ஆயிரத்து, 292 மாணவர்கள், வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றனர். வட்டார அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற மாணவர்களில், 3 ஆயிரத்து 709 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நேற்று நடைபெற்றன.
காஞ்சிபுரத்தில் எஸ்.எஸ்.கே.வி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி என, மூன்று மையங்களில் நேற்று போட்டிகள் நடைபெற்றன.
எஸ்.எஸ்.கே.வி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியை, கலெக்டர் ஆர்த்தி பங்கேற்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க.,- -எம்.எல்.ஏ.,எழிலரசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
குழு நடனம், இசைக்கருவி வாசித்தல், தனி நபர் நடனம் போன்ற பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மூன்று நாட்கள் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.