காஞ்சிபுரம் :காஞ்சிபுரத்தில் இருந்து பெரும்பாக்கம் செல்லும் சாலையில் இருபுறமும் வளர்ந்துள்ள முள்செடிகளை அகற்றி, போக்கு வரத்துக்கு வசதி ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் இருந்து பெரும்பாக்கம் வரை சாலையில் இரு புறமும் புதர் மண்டி சில இடங்களில் முட்செடிகள் சாலை வரை வளர்ந்து கிடந்தன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என கோட்ட பொறியாளர் அறிவுறுத்தல்படி கடந்த ஒரு வாரமாக அப்பணி நடந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த மாதம் பெரும்பாக்கம் -முத்துவேடு இடையே சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் திருப்பருத்தி குன்றம் பகுதியில் இருந்து குண்டு குளம், விஷார் சாலையில் இந்த பணி நடந்து வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாலை ஓரங்களில் செடிகள் வளரும். மழை காலத்தில் அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
இதனால் சாலை இரு புறமும் புதர் மண்டி கிடப்பதை அகற்றி சாலை யோரம் பழுது ஏற்பட்டிருந்தால் அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.கடந்த மாதம் பொன்னேரிகரை சாலை இருபுறமும் ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்த செடிகள் முழுமையாக அகற்றப்பட்டன.
தற்போது பெரும்பாக்கம் சாலையில் இரு புறமும் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.