காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்கள், 1,939 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 1,388 இடங்களுக்கான பத்திரங்கள் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, 746 இடங்கள், வருவாய் துறை கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலங்களின் மதிப்பு காரணமாக, அரசு நிலங்களை ஆக்கிரமித்து, நாளடைவில், போலியான ஆவணங்கள் மூலம், விற்பனை செய்கின்றனர்.
இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடைபெறும் அதே வேளையில், வீட்டு மனைகளுக்கு இடையே ஒதுக்கப்பட்டிருக்கும் ஓ.எஸ்.ஆர்.,எனப்படும் திறந்தவெளி இட ஒதுக்கீடு நிலங்களையும் கூறுபோட்டு விற்கும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.
ஓ.எஸ்.ஆர்., நிலங்களை விற்பது மட்டுமல்லாமல், அந்த நிலங்களுக்கு பட்டா பெற்று, சிப்காட், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிலம் எடுக்கும்போது, அரசுக்கே விற்று பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவங்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரங்கேறிஉள்ளன.
ஓ.எஸ்.ஆர்., நிலங்களுக்கு மோசடியாக பட்டா பெற்று, பல கோடி ரூபாய் இழப்பீடு பெற்றதாக, நில புரோக்கர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த மோசடி வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசின் பல கோடி ரூபாய் பணம் இழப்பு ஏற்படுத்த காரணமாக இருந்ததாக, நில எடுப்பு முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் என அரசு துறை உயரதிகாரிகள் பலரே சிக்கியுள்ளனர்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் பல இன்னும் கண்டறியப்படாமல் உள்ளன.
இதன்காரணமாகவே, ஓ.எஸ்.ஆர்., நிலங்களை பாதுகாக்க பல்வேறு சுற்றறிக்கைகள், உத்தரவுகளை நில நிர்வாக ஆணையர் அலுவலகம் தொடர்ந்து பிறப்பித்து வருகிறது.
நில நிர்வாக ஆணையர் நாகராஜன், கடந்த செப்டம்பர் மாதம், ஓ.எஸ்.ஆர்.,நிலங்களை பாதுகாக்க, கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிஇருந்தார்.
அதில், 'திறந்தவெளி இட ஒதுக்கீடு நிலங்கள் பலவும் இன்னும் தனியார் பெயரிலேயே உள்ளன. இதுபோன்ற பல இடங்களை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. வருவாய் துறையின் நில ஆவணங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பெயர் இல்லை.
'இந்த நிலங்களை பராமரிக்காததால், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பெயர்களில் இந்த அரசு நிலங்களின் விபரங்களை சேர்க்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி துறை, பேரூராட்சி துறை ஊழியர்களுக்கான ஆய்வு கூட்டத்தில், ஓ.எஸ்.ஆர்.,நிலங்களை கண்டறிந்து, அவற்றை வருவாய் துறை கணக்கில் சேர்க்க கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
அவரது உத்தரவை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள் ஆகியோர், தங்கள் எல்லைக்குட்பட்ட ஓ.எஸ்.ஆர்.,நிலங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், ஐந்து தாலுகாவில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில், தற்போது வரை, மொத்தம் 1,939 ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில், 1,388 இடங்களுக்கான பத்திரங்களை, வருவாய் துறையிடம் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கியுள்ளன. மீதமுள்ள, 551 நிலங்களுக்கு பத்திரம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.
ஓ.எஸ்.ஆர்.,நிலங்களுக்கான பத்திரம் ஒப்படைக்கப்பட்ட 1,388 இடங்களில், 746 இடங்களின் நில வகை மாற்றம் செய்யப்பட்டு, வருவாய் துறை ஆவணங்களில், அந்தந்த உள்ளாட்சி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
மீதம், 642 இடங்களுக்கான நில வகை மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 126 48காஞ்சிபுரம் ஒன்றியம் 145 128வாலாஜாபாத் ஒன்றியம் 273 124வாலாஜாபாத் பேரூராட்சி 25 5உத்திரமேரூர் பேரூராட்சி 58 58உத்திரமேரூர் ஒன்றியம் 100 88ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி 41 22ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் 420 407குன்றத்துார் ஒன்றியம் 674 465மாங்காடு நகராட்சி 24 18குன்றத்துார் நகராட்சி 53 25மொத்தம் 1,939 1,388
தரிசு நிலங்களை 'லே அவுட்' போட்டு வீட்டு மனைகளாக மாற்றும் போது, 30 சதவீதம் ஒதுக்கப்பட்டு, அதில், பூங்கா, கோவில், சாலை உள்ளிட்டவைக்கு இடம் ஒதுக்க வேண்டும். அந்த இடத்தை, சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பெயருக்கு பதிவு செய்து தர வேண்டும். அவ்வாறு பதிவு செய்த பிறகும் சில நில உரிமையாளர்கள், பழைய பட்டாவை வைத்து, புதிய பத்திரம் தயாரித்து, ஓ.எஸ்.ஆர்., நிலத்தை விற்று மோசடி செய்கின்றனர்.
குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய இரு தாலுகாக்களும் இப்பணியில் பின்தங்கியுள்ளன. ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் 429 ஓ.எஸ்.ஆர்.,இடங்களுக்கு பத்திரம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், 160 இடங்களுக்கு மட்டுமே, அந்தந்த உள்ளாட்சிகளின் பெயரில் நில வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 508 ஓ.எஸ்.ஆர்.,இடங்களுக்கு பத்திரம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், 192 இடங்களுக்கு மட்டுமே நில வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.