காஞ்சிபுரம், தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள், தங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணி தமிழகம் முழுதும் நடந்து வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள 62 மின் பிரிவு அலுவலகங்களிலும், டிச., 31 வரை ஆதாருடன் மின் இணைப்பு எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்நிலையில், மின் நுகர்வோரின் வசதிக்காக,காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், காஞ்சிபுரம் நகரம் சார்பில், மின்வாரிய ஊழியர்கள், மின் நுகர்வோர் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று ஒலிபெருக்கி வாயிலாக, மின் நுகர்வோருக்கு அழைப்பு விடுத்து, அப்பகுதியில் பொது இடத்தில் சிறப்பு முகாம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி, சங்கரமடம் உள்ளிட்ட காஞ்சிபுரம் நகர பிரிவு பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில், மின் ஊழியர்கள், பிரிண்டர் மிஷினுடன் நேரில் சென்று, மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், மின் நுகர்வோர் தங்களது மின் கணக்கீடு அட்டை, ஆதார் கார்டு ஒரிஜினல் அட்டை சிறப்பு முகாமிற்கு எடுத்துச்சென்றால், மின் ஊழியர்களே தாங்கள் கொண்டு வந்துள்ள 'பிரிண்டர் மிஷின்' வாயிலாக இலவசமாக நகல் எடுத்துக் கொள்கின்றனர்.
இதன் மூலம், பொதுமக்கள் ஒரு பைசா கூட செலவில்லாமல், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.
மின் ஊழியர்களே தங்கள் பகுதிக்கு நேரில் வந்து சிறப்பு முகாம் அமைப்பதால், காஞ்சிபுரம் நகர பகுதி மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.