வாலாஜாபாத்,காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமத்தில் இருந்து, ராஜகுளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலை ஓரம் வையாவூர் ஏரிக்கரை அருகே, சாலை ஓரம் இருந்த மின் கம்பம் சமீபத்தில் சாய்ந்துள்ளது. இதை சீரமைக்கும் பணியில், பல மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சாய்ந்த மின் கம்பத்திற்கு பதிலாக, மற்றொரு புதிய மின் கம்பம் நடப்பட்டு உள்ளது. அந்த மின் கம்பத்தில் மின் கம்பியை இழுத்து கட்டவில்லை. சாய்ந்த இருக்கும் மின் கம்பத்தை அகற்றும் பணியை, மின் வாரியத்தினர் அரைகுறையாக விட்டுள்ளனர்.
இதனால், வையாவூர்- ராஜகுளம் சாலையில் மின் விபத்து ஏற்படும் என, அச்சம் வாகன ஓட்டிகள் இடையே எழுந்துள்ளது.
எனவே, அரைகுறையாக விடப்பட்டுள்ள கம்பம் சீரமைக்கும் பணியை, மின் வாரிய ஊழியர்கள் விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.