மாற்றுத்திறனாளிகள் கல்வி, வேலை மற்றும் அரசின் நலத்திட்டங்களைபெறுவதற்கு அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை அவசியமாகும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பதிவு செய்து அரசு டாக்டரின் சான்றிதழ்பெற்ற பிறகு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பதிவு செய்வோர் சான்றிதழ் பெற ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கும், அதன் பின் அலுவலகத்திற்கும் என அலைந்து திரிகின்றனர். இதனை தவிர்க்க ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்களன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், டாக்டர்கள் ஒருங்கிணைந்து அங்கேயே மருத்துவ பரிசோதனைகள் செய்து சான்று வழங்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதிக்க பயன்படும் ஆடியோகிராம் கருவிகள் இல்லை. ஆடியாலஜிஸ்ட் பணியிடம் காலியாக உள்ளதால் பரிசோதனை செய்ய வழி இல்லை.
இதனால் வாய் பேச முடியாத செவித்திறனற்ற குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் சென்று பரிசோதனை செய்து பின் டாக்டரை பார்க்க மருத்துவமனைக்கு வருமாறு அலுவலர்கள் கூறினர். இதனை முன்பே அறிவித்து இருந்தால் அங்கு சென்று பரிசோதனைகளை முடித்துவிட்டு மருத்துவமனைக்கு வந்திருப்போமே என வேதனை தெரிவித்தனர்.
சிறப்பு முகாமில் நரம்பியல் டாக்டர், கண் டாக்டர், காது, மூக்கு தொண்டை டாக்டர், எலும்பு மூட்டு மற்றும் மனநல டாக்டர் ஆகிய ஐந்து டாக்டர்கள் இருக்க வேண்டும். காலை 9:00 மணிக்குள் மாற்றுத்திறனாளிகள் வந்த போது ஒரு டாக்டரை தவிர மற்ற 4 பேரும் காலை 11:00 மணிக்கு மேல் தான் வந்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்தவர்கள் வேறு வழியின்றி காத்திருந்தனர்.
மாற்றுத்திறனாளிகள், அரசு உதவி தேவைப்படுவோர், அடுத்தவர்தயவின்றி வாழ்கை போராட்டத்தை சந்திக்க துணிந்தவர்களை அரசு நிர்வாகம், துறை அதிகாரிகள், டாக்டர்கள் அணுகும் சுறை கேள்விக்குறியாக உள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெறுவது அவர்களின் உரிமை. அதிகாரிகளின் தயவிலோ,சலுகையினாலோ கொடுக்கப்படுவது அல்ல என்பதை இவர்கள் உணர வேண்டும், என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
பரிசோதனை கருவி இல்லை
எம்.சிவன்ராஜ், பரமக்குடி: குழந்தைக்கு காதுகேளாதோருக்கான அடையாள அட்டை வாங்க வந்தால் பரிசோதனைக்கான டாக்டர் இருக்கிறார். ஆனால் அதற்கான கருவியோ, பரிசோதனையாளரோ இல்லை என்கின்றனர்.
இப்போது மறுபடியும்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம்அல்லது சிவகங்கை சென்று பரிசோதித்து விட்டு இங்கு வரச்சொல்கின்றனர். இதனை முன்பே தெரிவித்திருந்தால் நேரடியாக அங்கு சென்றிருப்போம். இங்கும் அங்குமாக அலைக்கழிக்கிறார்கள்.
அதிகாரிகள் அலட்சியம்
ஆர்.கார்த்திகா, பரமக்குடி:மாற்றுத்திறனாளும் போராடி ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அரசு நலத்திட்டங்களை கொடுத்து ஊக்குவிக்கிறது. அதற்கானஅடையாள அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை தவிர்க்கவே இது போன்ற சிறப்பு முகாம்கள்.ஆனால் அதிகாரிகளின்அலட்சிய போக்கு இங்கேயும் தொடர்வது வேதனை அளிக்கிறது.