-நமது நிருபர்-
கோவை மாநகரில், சமீபகாலமாக வணிகக் கட்டடங்களில் 'பார்க்கிங்' இடமே ஒதுக்காமலும், ஒதுக்கிய இடங்களில் கடைகளை அமைத்துள்ளதாலும், ரோட்டோரங்களில் வாகனங்கள் ஆக்கிரமித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தமிழகத்தில் 2019ல், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன்படி, 1000 சதுர அடி பரப்பிலான வணிகக் கட்டடங்களுக்கும், அந்தப் பரப்புக்கு திட்ட அனுமதி தரும், அதிகார அமைப்பான உள்ளாட்சி அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில், கட்டட நிறைவுச் சான்று பெற வேண்டியது கட்டாயமாகவுள்ளது.
விதிமீறிய வணிக கட்டடங்கள்
கட்டட நிறைவுச் சான்று இருந்தால்தான், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்புப் பெற முடியும். அனுமதியின்றி, விதிகளை மீறி கட்டடம் கட்டுவோர் யாரும், சான்று பெற முடியாததுடன், மின் இணைப்பும்பெற முடியாது என்பதால், சமீபகாலமாக அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஆனால் பல கட்டடங்கள் விதிமீறி கட்டப்பட்டிருந்தாலும், அவற்றுக்கு சான்றுகள் தரப்பட்டுள்ளன.
குறிப்பாக, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் இறுதிக்காலத்தில், கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும், விதிமீறி கட்டப்பட்ட ஏராளமான வணிகக் கட்டடங்களுக்கு, சான்று தரப்பட்டு, மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களில், வரைபடத்தில் 'பார்க்கிங்' ஆகக் காட்டப்பட்ட இடங்களும், வணிக பயன்பாட்டில் உள்ளன.
இதன் காரணமாக, இந்தக் கடைகள் மற்றம் அலுவலகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அனைத்தும் ரோட்டோரங்களில் நிறுத்தப்படுகின்றன. அவ்வழியே வரும் பாதசாரிகள் ரோட்டில் நடக்க வேண்டியுள்ளது.
ரோட்டிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த விதிமீறல், நகரம் முழுவதும் பரவலாக நடந்து வருகிறது.
புதிய கட்டடங்களில் விதிமீறல்
ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, கிராஸ்கட் ரோடு, ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு, டி.வி.சாமி ரோடு, 100 அடி ரோடு, சிவானந்தா காலனி, ராமநாதபுரம், பீளமேடு என நகரின் பல பகுதிகளிலும், கடந்த மூன்றாண்டுகளில் கட்டப்பட்ட பல கட்டடங்களில், 'பார்க்கிங்' இடங்களே இல்லாததைப் பார்க்க முடிகிறது.
வடவள்ளியில் பிரமாண்டமான கட்டடம், மருதமலை ரோட்டில் மிகப்பெரிய மொபைல் ஷாப், ஜவுளிக்கடை அமைந்துள்ள கட்டடங்களிலும், 'பார்க்கிங்' இடங்களே ஒதுக்கப்படவில்லை.
ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் கூட, இதே போல 'பார்க்கிங்' இல்லாமல், நிறைய வணிகக் கட்டடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றை ஆய்வு செய்து, 'பார்க்கிங்'கிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை மீட்க வேண்டிய பொறுப்பு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது.
மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், ''இது குறித்து நகர அமைப்பு அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, கள ஆய்வு மேற்கொண்டு, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
அவர் எடுக்கும் நடவடிக்கையை, பார்க்கத்தானே போகிறோம்!
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, அன்சுல் மிஸ்ரா இங்கு மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது, இத்தகைய வணிகக் கட்டடங்களை ஆய்வு செய்து 'சீல்' வைத்தார். அதனால் நுாற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களில், 'பார்க்கிங்' இடங்கள் மீட்கப்பட்டன. கோர்ட்டில் உறுதியளித்த பின்பே, கட்டடங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. அவர் மாற்றப்பட்ட பின்பு, வேறு எந்த மாநகராட்சி கமிஷனரும் இந்த விதிமீறலை கண்டுகொள்ளவே இல்லை.