காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூர் ஊராட்சி, ஒற்றைவாடை தெருவிற்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் கீழ்பகுதியில்,திருப்பாற்கடலில் இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்ய நிலத்தடியில் புதைக்கப்பட்ட மெயின் குழாய் செல்கிறது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டது.
உடைந்த மெயின் குழாயை சீரமைக்க சிமென்ட் சாலையை உடைத்து குழாய் சீரமைக்கப்பட்டது. இதனால், பல இடங்களில்சாலை சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மண் சாலையாக மாறி இருந்தது.
இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர் கிராமவாசிகள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஒற்றைவாடை தெருவிற்கு புதிதாக தார்ச்சாலை அமைப்பதற்காக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மாதம் ஜல்லி கற்கள் சாலையில் பரப்பி விடப்பட்டதோடு, அடுத்தகட்ட பணி துவக்கப்படாமல், சாலை அமைக்கும் பணி ஒரு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், ஜல்லி கற்கள் மீது செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன. காலணி அணியாமல் நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, புதிய தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.