காஞ்சிபுரம், :வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 'மாண்டஸ்' எனும் புயலாக மாற இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் இருந்து, வட தமிழகம் நோக்கி இப்புயல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்து மாவட்டங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 8 மற்றும் 9 ம் தேதிகளில், கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் தயார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 11 துறை அலுவலர்களை கொண்ட 21 மண்டல குழுக்களை தயாராக இருக்க, கலெக்டர் ஆர்த்தி, உத்தரவிட்டுள்ளார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 60 நிரந்த மழை பாதுகாப்பு மையங்களும், 925 தற்காலிக மழை பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் இருப்பதாக, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழை பெய்யும் என்பதால், குன்றத்துார், மாங்காடு ஆகிய பகுதிகளில், அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தவுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியிலும் பாரதி நகர் உள்ளிட்ட இடங்களை, கண்காணிக்கின்றனர்.