ராமநாதபுரம் : ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம் கட்டடம் சேதமடைந்த நிலையில், மழை பெய்தால் கூரையில் சொட்டு, சொட்டாக நீர் வழிகிறது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் மக்களின் உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத்தின்தரை தளம், மேல் தளங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், ஆதார் புகைப்படம் மையம், மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட ஊராட்சி அலுவலகம், நில எடுப்பு பிரிவு, மகிளா நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. கட்டடம் அமைத்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டதால் கூரை பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன.
முதன்மை கல்வி அலுவலகம் போர்டிகோ, உள் பகுதியில் மழை நீர் கசிந்து தண்ணீர் சொட்டு,சொட்டாக விழுகிறது. முதன்மை கல்வி அலுவலகம் செல்லும் வழியில் ஆதார் புகைப்படம் மையம் அருகே போர்டிகோ கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.