கோயம்பேடு, கோயம்பேடு சந்தைக்கு, பெரம்பலுார், ஒட்டன்சத்திரம், தேனி, நெல்லை, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் முருங்கைக்காய் வரத்து உள்ளது.
ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை முருங்கைக்காய் சீசன் என்பதால், தினமும் 10 லாரி வரை மார்க்கெட்டிற்கு வருவது வழக்கம். தற்போது, சீசன் முடிந்ததால், முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது.
இதையடுத்து, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முருங்கைக்காய் வரத்து உள்ளது. நேற்று சந்தைக்கு 5,000 கிலோ மட்டுமே முருங்கைக்காய் வந்தன. சந்தையில், மஹாராஷ்டிரா முருங்கைக்காய் கிலோ, 180 -- 200 ரூபாய்க்கு விற்பனையானது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'முருங்கைக்காய் சீசன் முடிந்ததால் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
'குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து, ரயிலில் முருங்கைக்காய் வருகிறது; பொங்கல் வரை இந்த விலை நீடிக்கும்' என்றனர்.