ஆவடி, சென்னை புற நகர் ரயில் நிலையங்களில் முக்கியமானதாக விளங்கும் ஆவடி நிலையத்திற்கு, தினம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் வருகின்றனர்.
இதன் பின்புறம், திருமலைராஜபுரத்தில் அரசு 'டாஸ்மாக்' கடை, 24 மணி நேரமும் செயல்படுகிறது.
இங்கு போதை ஏற்றும் 'குடி'மகன்கள் ரகளையில் ஈடுபடுவதும், ரயில் நிலையத்தில் ஆங்காங்கே படுத்து கிடப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால், இரவில் பணி முடிந்து, பயத்துடனே பெண்கள் சென்று வருகின்றனர்.
ஐந்து மாதங்களுக்கு முன், ஆவடி ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டமானதில் இருந்து, ரயில் நிலையத்தில் அவர்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.
உடைந்த சுவர் மீது அமர்ந்து மது அருந்துகின்றனர். குடித்து விட்டு மற்றவர்களுக்கு தொல்லை தருகின்றனர்.
இப்பகுதியில் மட்டும் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியாக, கடந்த மாதம் 30 வழக்குகள் அதிகரித்துள்ளன.
உதாரணத்திற்கு, கடந்த வாரம் நள்ளிரவில், குடி போதையில் நண்பர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. ரயில்வே போலீசார் அவர்களை தடுத்து அனுப்பினர்.
இப்படி, நாளுக்கு நாள் பல பிரச்னைகளை நடப்பதால் மன உளைச்சலுக்கு ஆளான போலீசார், தங்கள் செலவில் 2,500 ரூபாயில், தகர பலகையால் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர்.
பயணியர் கூறியதாவது:
ஆகஸ்ட் மாதமே சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறிய நிலையில், ஐந்து மாதங்களாகியும் பணிகள் துவங்கவில்லை. மிகவும் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
ரயில் நிலையத்தில் எஞ்சியுள்ள சுற்றுச்சுவர் முழுதும் உடைந்தால் தான், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரோ என்னவோ?
இவ்வாறு அவர்கள் கூறினர்.