சேலையூர், தாம்பரம் அடுத்த சேலையூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரெஜிகுமார், 47; எல்.ஐ.சி., ஏஜன்ட். இவரது கணவர் இறந்தநிலையில், மென்பொறியாளரான மகள் ஜூலியுடன், 25, வசித்து வந்தார்.
கடந்தாண்டு, ஜூலியின் திருமண செலவிற்காக, அதே பகுதியைச் சேர்ந்த கவிதா, மோகன், ஜீவரத்தினம் உள்ளிட்ட பலரிடம், 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார். திருமணம் முடிந்த பின், மேற்கண்ட மூவரும் பணத்தைத் திருப்பி கேட்டபோது, ரெஜிகுமார் போலி காசோலை கொடுத்துள்ளார். ஆத்திரம் அடைந்த மூவரும், ரெஜிகுமாரின் புகைப்படத்தை 'செக் மோசடி கும்பல்' என வீட்டின் சுவரில் ஒட்டினர்.
இது குறித்து, ரெஜிகுமார் தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். விசாரித்த சேலையூர் போலீசார் மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த கவிதா, மோகன், ஜீவரத்தினம் மற்றும் சிலர், நேற்று மாலை, கிழக்கு தாம்பரம் பகுதியில், மீன் வாங்குவதற்காக வந்த ரெஜிகுமாரை முற்றுகையிட்டு, பணத்தைத் திருப்பி தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.
சேலையூர் போலீசார் விசாரணையில், ரெஜிகுமார் மற்றும் அவரது மகள் ஜூலி ஆகியோர், திருமணத்திற்காக பலரிடம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.