ஆவடி, பூந்தமல்லி, ஷீரடி சாய் நகரைச் சேர்ந்தவர் வடிவேலு, 50. இவரிடம், காட்டுப்பாக்கம், செந்துார் புரத்தில் பட்டாவுடன் கூடிய நிலம் விற்பனைக்கு இருப்பதாக, அதே பகுதியை சேர்ந்த புரோக்கர் செல்வகுமார், 38, என்பவர் அணுகியுள்ளார். வடிவேலு 93 லட்சம் ரூபாய் பேரம் பேசி, அட்வான்சாக 1,000 ரூபாய் கொடுத்து பத்திர நகலை பெற்றுள்ளார்.
அதை தொடர்ந்து, கடந்த ஏப்., 18ம் தேதி, குன்றத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், செந்துார் புரத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ், 39, குருசாமி, 62, மற்றும் செல்வகுமார் ஆகியோரிடம் ரொக்கமாகவும், வரைவோலையாகவும் 99.50 லட்சம் ரூபாய் கொடுத்து, அந்தோணி ஜெனித் என்பவர் வாயிலாக கிரையம் செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், அக்., 3ம் தேதி, வடிவேலுவிடம் அசல் பத்திரங்களை கொண்டு வரும்படி, குன்றத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. நேரில் சென்று பார்த்தபோது, அவர் வாங்கிய நிலம் கல்யாணி மற்றும் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வடிவேலு, அக். 4ம் தேதி, ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட ஆண்ட்ரூஸ், செல்வகுமார் மற்றும் குருசாமியை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.