கோடம்பாக்கம், தேனம்பேட்டை மண்டலம், கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தில், 'கடை எண்: 504' அரசுக்கு சொந்தமாக 'டாஸ்மாக்' மதுபான கடை உள்ளது. அதன் அருகிலேயே பாரும் அமைந்துள்ளது.
டாஸ்மாக் கடையில், மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசு விதி. அதன்படி, இந்த 'டாஸ்மாக்' கடை செயல்படுகிறது. ஆனால், அதன் அருகில் உள்ள பாரில், 24 மணி நேரமும், சரக்கு விற்பனை நடக்கிறது.
அதிகாலை 4:00 மணிக்கு சென்று கேட்டாலும் சரி, நள்ளிரவு சென்று கேட்டாலும் சரி, உடனடியாக சரக்கு கிடைக்கும். அதற்கு கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும். 'குடி'மகன்கள் அதைப்பற்றி கவலைப்படாமல், கேட்கிற பணத்தை கொடுத்து, சரக்கு வாங்கி போதை ஏற்றிக் கொள்கின்றனர்.
இதனால், விடிந்ததும் 'குடி'மகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு கைகலப்பும் ஏற்படுகிறது. இதனால், குடியிருப்பு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே, மக்கள் நலனை கருத்தில் வைத்து, 24 மணி நேரமும் செயல்படும் 'டாஸ்மாக் பார்' மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.