பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. உள்ளூர் வாசிகள் மட்டும் இல்லாமல், பல மாவட்டங்களைச் சேர்ந்தோர் இப்பகுதிகளில் தங்கி, நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
பூந்தமல்லி நகராட்சியில் ஐந்து மாதங்களுக்கு மேலாக சுகாதார ஆய்வாளர், நகர அமைப்பு ஆய்வாளர், நகர அமைப்பு சர்வேயர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
குறிப்பாக, நகராட்சிக்கு வருவாய் ஈட்டக்கூடிய நகரமைப்பு பிரிவில் அதிகாரி இல்லாததால், புதிதாக வீடு கட்டுவோர் அனுமதி கேட்டு அளித்த மனு, நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது.
திருவள்ளூரில் இருந்து பொறுப்பில் வந்துள்ள சுகாதார அதிகாரியும் வேலை பளு காரணமாக முறையாக கண்காணிக்க முடிவதில்லை.
இதனால், பல வார்டுகளில் குப்பை குவிந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்குவதில் கூட, மக்களுக்கு சிக்கல் இருக்கிறது.
போதிய அதிகாரிகள் இல்லாததாலே, கடந்த மழைக்கு, பூந்தமல்லி பகுதி அதிகம் பாதிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டது.
டிசம்பர் மாத மழைக்கு அதுபோல இல்லாமல், உடனடி மீட்பு பணி, சுகாதார விசயத்தில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூந்தமல்லி நகராட்சி கூட்டம், அதன் தலைவர் தி.மு.க.,வைச் சேர்ந்த காஞ்சனா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் நாராயணன், அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 20வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சவுந்தர்ராஜன், ''கமிஷனர் நாராயணன் மற்றும் வருவாய் பிரிவு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்'' என்றார்.மேலும், ''இவர்களால் வளர்ச்சி திட்ட பணிகள் அதிகளவில் தேங்கியுள்ளன. கடந்த மழையின் போதுகூட, தேங்கிய மழை நீரை சரிவர அகற்ற ஒத்துழைப்பு வழங்கவில்லை,'' என்றார்.இவரது தீர்மானத்தை, மற்ற கவுன்சிலர்கள் வரவேற்று, மேஜையை தட்டி, ஆதரவு தெரிவித்தனர். தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றும்படி கூறினர். அப்போது கமிஷனர் நாராயணன், ''பணிகளை முடிக்க, அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதையடுத்து அந்த தீர்மானம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.