லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்குரிய வியூகம் வகுக்கும் வகையில், சட்டசபை தொகுதிகளை பிரித்து, மாவட்ட செயலர்களையும், முன்னாள் அமைச்சர்களையும் பொறுப்பாளர்களாக நியமிக்க, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டு உள்ளார்.
இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., மாவட்ட செயலர்களிடம், இரண்டு சட்டசபை தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டன. ஒரு தொகுதியில் மாவட்ட செயலரும், மற்றொரு தொகுதியில் கட்சி நிறுத்துகிற வேட்பாளரையும் வெற்றி பெற வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த அடிப்படையில், சட்டசபை தேர்தலை சந்தித்த தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது.
தி.மு.க., பாணியில், லோக்சபா தேர்தலில் வெற்றி வியூகம் வகுக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதாவது, 39 லோக்சபா தொகுதிகளில் அடங்கிய சட்டசபை தொகுதிகளை, மாவட்ட செயலர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க., அமைப்பு செயலர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது.
பொறுப்பாளர்களை தேர்தல் பணிகளுக்கும், கட்சி பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான், கட்சி உயிரோட்டமாக இருக்கும்; கட்டமைப்பும் வலுபெறும் என, பழனிசாமியிடம், தென் மாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., வலிமையாக உள்ளது. எனவே, அம்மண்டலத்தை தவிர மற்ற மண்டலங்களில் சட்டசபை தொகுதிகளை பிரித்து, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சென்னை மண்டலத்தில், மூத்த மாவட்ட செயலர்களை தவிர, சில மாவட்டச் செயலர்கள் சரிவர செயல்படாமல் உள்ளனர். பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின், சட்டசபை தொகுதி வாரியாக, முன்னாள் பெண் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா போன்றவர்கள், பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையில், இதற்கு காரணமான தி.மு.க., அரசை கண்டித்து, வரும், 9ம்தேதி பேரூராட்சிகளிலும்; 13ம் தேதி நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும்; டிச., 14ல் ஒன்றியங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை சரிவர நடத்தாத மாவட்டங்களைக் கணக்கெடுத்து, அம்மாவட்டத்திற்கு கட்சி பொறுப்பாளர்களை நியமித்து, மாவட்ட செயலர்களை மாற்றவும் பழனிசாமி முடிவு செய்துள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -