சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றிலும், உப்பாற்றிலும் இரு மாதங்களாக வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வைகை ஆற்றின் துணை ஆறான உப்பாற்று நீரை பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காக சுப்பன் கால்வாய் திட்டம் 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.
உப்பாற்றில் கள்ளர்குளம் என்ற பகுதியில் அணை கட்டப்பட்டு, கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. தண்ணீர் செய்களத்துார் பெரிய கண்மாய், சின்ன கண்மாய், மஞ்சிக்குளம் கண்மாய், கல்குறிச்சி கண்மாய்க்கு சென்று பின்னர் வைகை ஆற்றில் வீணாக கலக்கிறது.
இத்திட்டம் முழுமை பெற்றால் வளச்சனேந்தல் கண்மாய், வடக்கு சந்தனுார் கண்மாய், என்.புக்குளி கண்மாய், எஸ்.காரைக்குடி கண்மாய், புத்தனேந்தல் கண்மாய், அரியனுார் கண்மாய், மருதங்கநல்லுார் கண்மாய், தேவரேந்தல் கண்மாய், செட்டியேந்தல் கண்மாய், கோவானுார் கண்மாய், தச்சனேந்தல் கண்மாய், காக்குடி கண்மாய்.
எழுநுாற்றிமங்கலம் கண்மாய், மணக்குடி கண்மாய், பிடாரனேந்தல் கண்மாய், திருவேங்கடம் கண்மாய், அகரேந்தல் உள்ளிட்ட 30 கண்மாய்கள் பயன் பெறும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
தற்போது உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடிக்கொண்டிருந்தாலும் இதனை பயன்படுத்த முடியாமல் கண்மாய்கள் வறண்டுள்ளதால் விவசாயிகள் நிலங்களை தரிசாக போட்டுள்ளனர்.
இந்தப்பகுதியில் காய்ந்து கருகி வரும் நெற் பயிர்களை பாதுகாக்க விலைக்கு நீரை பெற்று பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
ராமமுருகன், காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு, பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் இ ணைந்து 40 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சுப்பன் கால்வாய் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து சுப்பன் கால்வாய் நீர் தேக்க திட்டமாக செயல்படுத்திட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தரிசு நிலங்களை மேம்படுத்தி விளைநிலங்களாக மாற்றும்தமிழக அரசு இது போன்ற பாசன திட்டங்களை மேம்படுத்தி தரிசாக கிடக்கும் பாசன நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இதனை வலியுறுத்தி டிச., 15ல் கவன ஈர்ப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது, என்றார்.