திருவூர்,திருவள்ளூர் அடுத்த, திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், நேற்று முன்தினம், உலக மண் வள நாள் விழா நடந்தது.
விழாவில், மண் வள முக்கியத்துவம் மற்றும் மண் வள மேம்பாடு குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பானுமதி சிறப்புரையாற்றினார்.
மண் வளம், நீர் வளம் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கின் முக்கியத்துவம் குறித்து பேராசிரியர் பெ.சாந்தி விளக்கமளித்தார்.
தொடர்ந்து மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மண் வளத்தை மேம்படுத்துதல், மண் பரிசோதனை அடிப்படையில் சமச்சீர் உரமிடல், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, வீட்டு தோட்டம் குறித்து வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.
பின், தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மண் வளம் காப்போம் என்ற விளம்பர பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டபடி பேரணி நடந்தது.
அதை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பின், விழாவில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு காய்கறி விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.