திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியத்தில், கூர்மவிலாசபுரம் மற்றும் நல்லாட்டூர் ஊராட்சியில், தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
முகாமை, திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் துவக்கி வைத்தார்.
இதில், கால்நடை உதவி மருத்துவர் பிருந்தா, பெமினாபானு உள்ளிட்டோர் பங்கேற்று, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், பெரியம்மை தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலட்டுத்தன்மை சிகிச்சை, கோழி, ஆடுகளுக்கு தடுப்பூசி உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில், இரு ஊராட்சிகளில் இருந்து பசுக்கள் 584, வெள்ளாடுகள் 578, செம்மறி ஆடுகள் 484, கோழிகள் 426, செயற்கை முறை கருவூட்டல் 24 என, மொத்தம் 2,098 கால்நடைகளுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது. மேலும், முகாமில், கலப்பின கிடேரிகள் பேரணி நடத்தி, சிறந்த கலப்பின கன்றுகளுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
இதுதவிர, சிறந்த கால்நடை பராமரிப்பு விவசாயிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.