விருதுநகர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள் ,9 பேரூராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊரிலும் உள்ளாட்சிகளின் பராமரிப்பில் பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். பஸ் ஸ்டாண்ட்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆண், பெண்களுக்கென தனியாக கழிப்பறைகள், பயணிகள் உட்கார இருக்கை வசதிகள், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை உட்பட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இத்தனை வசதிகள் இருந்தும் நகராட்சிகள் அவற்றை முறையாக பராமரிப்பு செய்யாமல் விட்டு விட்டன. இதனால், பயணிகள் பஸ் ஸ்டாண்டுகளின் உள்ளே செல்ல சங்கடப்படுகின்றனர்.
கழிப்பறைகள் சுத்தம் இல்லாமல் சுகாதார கேடாக உள்ளன. 2, 3 கழிப்பறைகள் இருந்தாலும், எவற்றையும் பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளது. இதனால், பயணிகள் அவசரத்திற்கு பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள வாறுகால்களை நாட வேண்டியுள்ளது. இவற்றையும் சுத்தப்படுத்தாமல், இருப்பதால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் துர்நாற்றம் எடுக்கிறது.
பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள கடைகள் அனைத்தையும் உள்ளாட்சிகள் வாடகைக்கு விட்டுள்ளது. இருசக்கர வாகன காப்பக வருமானம், டி.வி., மூலம் விளம்பர வருமானம் என, பலவித இனங்கள் மூலம் வருமானம் வருகிறது.
பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க உள்ளாட்சிகள் முனைப்பு காட்டுவதில்லை.
அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. கழிப்பறைகள் சுகாதார கேடாகவும், பூட்டியும் கிடக்கின்றன. பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள வாறுகால்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடாக உள்ளது. இதனால் பகலிேலயே பயணிகளை கொசுக்கள் பதம் பார்க்கும் நிலை உளளது.