திருவாலங்காடு,
சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் அடுத்துள்ளது புதுார் கிராமம்.
இங்கு, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து, எல்லப்பநாயுடுபேட்டை, காந்திகிராமம், புதுார் காலனி கிராமம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி, சென்னை நகருக்கு பணிக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிறுத்தத்தில், காலை 4:00 மணி முதல், இரவு 12:00 வரை வெளியூர்களுக்கு அதிகம் பேர் பயணிக்கின்றனர்.
மேலும், பேருந்து நிறுத்தம் வளைவில் உள்ளதால், இரவு நேரங்களில், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் பேருந்துக்காக காத்திருப்போர் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும், இந்த பகுதி இருட்டாக உள்ளதால், வழிப்பறி, பெண்களை பாலியல் சீண்டல் கொடுப்பது அதிகரித்து வருகிறது.
எனவே, பயணியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த பேருந்து நிறுத்தத்தில் உயர்கோபுர மின் விளக்கு பொருத்த வேண்டும் என, புதுார் மக்கள் 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந் நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்கோபுர மின் விளக்கை அமைத்து வருகின்றனர்.