சூலூர்;கார்த்திகை தீபத்தையொட்டி, சூலூர் வட்டாரத்தில் அகல் விளக்குகள் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
கார்த்திகை மாதம் என்றாலே திருவண்ணாமலை தீபத் திருவிழாதான் அனைவரின் நினைவுக்கு வரும். கார்த்திகை 1ம் தேதி முதல், மாதம் முழுக்க, வீட்டு வாசலில் அகல் விளக்குகள் ஏற்றுவது நமது பாரம்பரியம். திருவண்ணாமலை தீபத்துக்கு முதல் நாள் பரணி தீபமாகவும், மறுநாள் சர்வாலய தீபமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
மூன்று நாட்களும் வீடுகள், கோவில்களில் அதிக எண்ணிக்கையில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். தீப திருவிழாவை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் அகல் விளக்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
சூலூர், சின்னியம்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அகல் விளக்கு கடைகளில் விற்பனை தீவிரமாக நடக்கிறது. ஒரு முகம், ஐந்து முகம் என, பல வகையான விளக்குகளை மக்கள் வாங்கி சென்றனர்.
இதுகுறித்து விற்பனையாளர்கள் கூறுகையில்,'கையால் செய்த விளக்குகள், அச்சால் வார்க்கப்பட்ட பலவித விளக்குகள் விற்பனை செய்கிறோம். பீங்கான் விளக்குகளை தவிர்த்து மண் விளக்குகளை மக்கள் பயன்படுத்தினால், எங்கள் வாழ்வாதாரம் மேம்படும்,' என்றனர்.