திருத்தணி, திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, காலை, 9:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில், தேர்வீதியில் பிரசாத கடை அருகே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்ட சொக்கப்பனையில், நெய் தீபம் ஏற்றப்பட்டது.
அதே நேரத்தில், கோவிலின் எதிரில் உள்ள, பச்சரிசி மலையில், பெரிய அகல் விளக்கில், 350 கிலோ நெய், இரண்டரை அடி கனம், 10 மீ., நீளமுள்ள திரியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது, மலைக் கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பச்சரிசி மலையில் தீபம் மற்றும் சொக்கபனையில் தீபத்தை பார்த்து, 'அரோகரா, அரோகரா' என, பக்தி முழக்கமிட்டனர்.
இந்த தீபத்தை பார்த்த பின், திருத்தணி நகரம் முழுவதும் வீடுகள் மற்றும் கடைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். நேற்று காலை முதல், இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
அதனால், பொது வழியில் மூன்று மணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் ஒன்றரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
சில பக்தர்கள் கார்த்திகை என்பதால் மலர், மயில் காவடிகளுடன் வந்து மூலவரை வழிபட்டனர். மலைக்கோவிலில் உள்ள சித்த மருத்துவம் சார்பில், பக்தர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்
l மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, கார்த்திகை மஹா தீபத்தையொட்டி, மூலவர் அம்மனுக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கோவில் வளாகம் முழுதும் நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.
l நகரி டவுனில் உள்ள கரியமாணிக்க பெருமாள், புக்கை காசிவிஸ்வநாதர், நாகலாபுரம் வேத நாராயண சுவாமி, நாராயணவனம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், சத்திரவாடா கரிய வரதராஜபெருமாள், சிதம்பரேஸ்வரர், நகரி கரகண்டேஸ்வர், டி.ஆர்.கண்டிகை தேசம்மாள் கோவில்களில், மஹா தீபம் ஏற்றப்பட்டது.