ஆனைமலை:ஆனைமலையில், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகங்களை, அரசு மேல்நிலை பள்ளிக்கு, இடமாற்றம் செய்வதற்கு, பேரூராட்சி நிர்வாகம் முட்டுக்கட்டை போடுவதால், சிக்கல் எழுந்துள்ளது. உயர் அதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனைமலை ஒன்றிய, புதிய அலுவலக வளாகத்தை ஒட்டி, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகம் செயல்படுகிறது.
தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில், இரண்டு அறைகளும், வேளாண்துறை அலுவலகத்தில், இரண்டு அறைகளும் உள்ளன. அறைகள், சிறியதாக உள்ளதாலும், கட்டடங்கள், 50 ஆண்டுகள் பழமையானவை என்பதாலும், இங்கு பணிபுரியும் அதிகாரிகள், இடநெருக்கடியால் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
விவசாயிகள் அதிகமாக வந்தால், அலுவலகத்தில் அமருவதற்கு கூட இடமில்லை. கிடங்கு சிறிய அளவில் உள்ளதால், உரம், விதை உள்ளிட்ட இடு பொருட்களை இருப்பு வைக்க முடியாமல், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்படுகிறது.
பழைய கட்டடங்கள் என்பதால், இரண்டு அலுவலக கட்டடங்களின், மேற்கூரையின் கான்கிரீட் பூச்சு உதிர்ந்து விழுவதுடன், பக்கவாட்டு சுவர்கள் உருக்குலைந்தும், உட்புற சுவர்களின் சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுகின்றன.
இதற்கு தீர்வாக, தற்போது அலுவலகம் செயல்படும் இடத்தில், 33 சென்ட்டில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டுவதற்கு, அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதற்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒன்றிய நிர்வாகத்திடம் இடம் கேட்கப்பட்டது; நிர்வாகம் மறுத்ததால், புதிய கட்டடம் கட்டப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இரண்டு அலுவலகங்களுக்கும், புதிய கட்டடம் கட்ட, கடந்தாண்டு 2.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை, அலுவலகங்களுக்கு மாற்று இடம் தேடுவதில், இழுபறி நீடித்தது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது, அரசால் திரும்ப பெறப்பட்டு, மாற்று திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், இரண்டு அலுவலகங்களையும், ஒன்றிய அலுவலகத்துக்கு, எதிரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, இடமாற்ற முடிவு செய்யப்பட்டது. இதில், தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பல கட்ட கோரிக்கைக்கு பின், தற்போதுள்ள பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, அங்கேயே புதிய கட்டடங்களை, கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்காக, மாற்று இடம் பார்த்து, அலுவலகங்களை இடமாற்றம் செய்தபின், அந்த தகவலுடன், புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்க கோரி கடிதம் அனுப்புமாறு, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளி வளாகத்தில் உள்ள, மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகங்களை, இடமாற்றம் செய்ய முடிவு செய்திருந்தோம்.
ஆனால், பேரூராட்சி நிர்வாகம் தரப்பில், அதற்கு, ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன், பேச்சு நடத்தி வருகிறோம்; விரைவில், அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி கூறியதாவது:
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான, வகுப்பறை பழமையானதாக உள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில், புதிய கட்டடம் கட்டி, முடிக்கப்படும் வரை, தற்காலிகமாக இந்த அறையை கேட்கின்றனர்.
அந்த அலுவலகத்தை கொடுத்தால், புதிய கட்டடத்துக்கு மாறும் போது, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான வகுப்பறையை, புனரமைத்து கொடுக்க வேண்டும், என, கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக, இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஆனைமலையில், இட நெருக்கடி காரணமாக, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள், பயிற்சி, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த, முடியாத நிலை நீடிக்கிறது. இருதுறை அதிகாரிகளும், விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று, கூட்டங்கள் நடத்துகின்றனர்.தற்போது, நடந்து வரும் பேச்சுவார்த்தையில் இப்பிரச்னைக்கு, தீர்வு காணப்பட வேண்டும். அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், இதில், கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும், என்கின்றனர் விவசாயிகள்.