திருவள்ளூர், திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 450க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகரில், ஜே.என்.சாலை, பெரியகுப்பம், ரயில் நிலைய சாலை, சி.வி.நாயுடு சாலை, செங்குன்றம் சாலை போன்ற பிரதான சாலை மற்றும் தெருக்களில், இரவில் வெளிச்சம் தருவதற்காக, 3,880 மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதில், 40 வாட்ஸ் குழல் விளக்கு 2,539; சி.எப்.எல்., 236; 70 வாட்ஸ் சோடியம் விளக்கு - 83; 150 வாட்ஸ் சோடியம் விளக்கு - 123; 250 வாட்ஸ் சோடியம் விளக்கு - 374; 400 வாட்ஸ் சோடியம் உயர்கோபுர மின் விளக்கு - 156 மற்றும் எல்.இ.டி., மின் விளக்கு - 369 விளக்குகள் உள்ளன.
மின் சிக்கனத்தை கடைப்பிடிக்க, அனைத்து விளக்குகளையும், எல்.இ.டி., விளக்குகளாக பொருத்த, நகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக, மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக, 4 கோடி ரூபாயினை, தமிழக அரசு, ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியில், ஏற்கனவே உள்ள, 369 எல்.இ.டி., விளக்குகளைத் தவிர, ஏனைய 3,511 விளக்குகளையும், எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற, நகராட்சியில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நகராட்சி தலைவர் உதயமலர் கூறுகையில், 'மின் சேமிப்பின் அவசியம் மற்றும் பயனீட்டு கட்டணம் குறைக்கும் வகையில், நகராட்சியில் பயன்பாட்டில் உள்ள, குழல் விளக்கு, சோடியம் விளக்கு.
'சி.எப்.எல்., விளக்குகளை, அவற்றின் திறனுக்கு ஏற்ப, 20, 40, 70, 120 மற்றும் 200 வாட்ஸ் எல்.இ.டி., மின் விளக்குகளாக மாற்றப்படும். இதற்கான பணிகள் தற்போது துவங்கப்பட்டு உள்ளது' என்றார்.