பொள்ளாச்சி;பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்நாள் கூட்டம் நடந்தது. நகர பா.ஜ.,வினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி அரசு கல்லுாரிக்கு போதுமான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஜெராக்ஸ் இயந்திரம், தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம், கணினி ஆய்வகத்துக்கு யு.பி.எஸ்., இன்வர்ட்டர், பிளாஸ்டிக் நாற்காலிகள், மாணவர்கள் உணவருந்தும் இடத்தில் மேற்கூரை வசதிகள் மேம்படுத்த வேண்டும்.
கூடுதல் பாடப்பிரிவுகள் துவங்கினால், மாணவர்களுக்கு பயனளிக்கும். கல்லுாரி படிப்பின் இறுதி ஆண்டிலேயே, நிறுவனங்களை வரவழைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி பள்ளி மேலாண்மை குழுவினர் கொடுத்த மனுவில், 'பள்ளி ரோட்டில் அதிகமான வாகனங்கள் செல்வதால், பள்ளி நேரத்தில் விபத்து ஏற்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளி முன் வேகத்தடை அமைக்க வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளனர்.
ஆச்சிப்பட்டி மா.கம்யூ., கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி பகுதியில், பெட்ரோல் பங்க், வணிக வளாகம், மெடிக்கல் ஸ்டோர், காய்கறி கடைகள், பஸ்களில், பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். மற்ற மாவட்டங்களில், 10 ரூபாய் நாணயங்களை வாங்குகின்றனர். அனைத்து கடைகளிலும் நாணயத்தை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி மாணவியர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஜமீன்கோட்டாம்பட்டி, தனியார் செவிலியர் கல்லுாரியில், உதவித்தொகையுடன் இலவசசெவிலியர் கல்வி பயிற்சி தருவதாக கூறினர். இதனால், கடந்த, 2020ம் ஆண்டு, 15 பேர் மதிப்பு சான்று, ஜாதிச்சான்று கொடுத்து சேர்ப்பு கட்டணம், 1000 ரூபாய் செலுத்தினோம்.
சான்று கிடைக்கல!
கொரோனா காலத்தில் கல்லுாரி செயல்படாததால், 'ஆன்லைன்' வாயிலாக பயின்றோம். ஒவ்வொரு, ஆறு மாதத்துக்கும், 3,000 ரூபாய் பணம் செலுத்தினோம். இந்த கல்லுாரி, கடந்த ஆறு மாதங்களாக செயல்படாத நிலையில், தற்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுவதாக கூறினர்.
திண்டுக்கல் மாவட்டம் சென்று, கல்லுாரி முதல்வரிடம், கல்வி சான்று, மதிப்பெண் மற்றும் செவிலியர் சான்றுகளை கேட்டால், ஒவ்வொருவரும், 30 ஆயிரம் ரூபாய்முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தினால் தான் தருவேன் என கூறினார். இதுகுறித்து, நடவடிக்கை எடுத்து சான்றுகளை பெற்றுத்தரவேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.