ஆவடி ஆவடி -- திருவேற்காடு செல்லும் தடம் எண்: 'எஸ்52' என்ற சிற்றுந்து, ஆவடி மார்க்கெட், கோவர்த்தன கிரி, அய்யன்குளம், பருத்திப்பட்டு வழியாக திருவேற்காடு சென்று வருகிறது.
இதில், பாபா கோவில் அருகில் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் ஏறுகின்றனர். ஆவடி காமராஜர் நகரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் இவர்கள், படிக்கட்டில் தொங்கிய படி, பிற பயணியருக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை தட்டிக்கேட்போரை ஒருமையில் வசைபாடி அட்டகாசத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. மேலும், சாலையில் செருப்பை தேய்த்தபடி செல்வது உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால், பயணியர் கடும் அவதியடைந்து வருகின்றனர். கண்டிக்க முன்வருவோரும் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை தொடர்வதால் எதற்கு வம்பு என, ஒதுங்கி கொள்கின்றனர்.
எனவே, மேற்கண்ட தடத்தில் போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.