பொள்ளாச்சி, டிச. 7-
பொள்ளாச்சி திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை துவக்க விழா மற்றும் கோவில்களுக்கு தீப எண்ணெய் வழங்கும் விழா, சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் நடந்தது.
தொழில்வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் ரகுபதி வரவேற்றார். நகராட்சி துணை தலைவர் கவுதமன், அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர், துணை தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் ததேவானந்த சரஸ்வதி சுவாமிஜி, மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சுந்தரபாபுஜி சுவாமிகள், கோவில்களுக்கு தீப எண்ணெய் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.
அகில பாரத அனுமன் சேனா நிறுவன தலைவர் ஸ்ரீதரன், பரமசிவம் நாச்சம்மாள் அறக்கட்டளை தலைவர் ஈஸ்வரமூர்த்தி பேசினர். அறக்கட்டளை கவுரவ தலைவர் சங்கரவடிவேலு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த, 50 கோவில்களுக்கு முதற்கட்டமாக தீப எண்ணெய் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கோவில்களுக்கு தீப எண்ணெய் வழங்கப்படும், என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.