அன்னுார்;பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் அன்னுாரில் இன்று மதியம் 3:00 மணிக்கு நடக்கிறது. இதற்காக பா.ஜ., சார்பில், நகர் முழுவதும் கொடி கட்டப்பட்டது. குறிப்பாக கோவை ரோட்டில், 3 கி.மீ., தொலைவிற்கு கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டத்துக்காக, பிளக்ஸ் கட்டிக் கொண்டிருந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மீதம் உள்ள கொடிகளை நடும்பணியையும் கட்சியினர் கைவிட்டனர். மேட்டுப்பாளையம் போலீஸ் டி.எஸ்.பி., பாலாஜி, பா.ஜ., நிர்வாகிகளிடம், "உடனடியாக தேசிய, மாநில நெடுஞ்சாலையில் உள்ள கொடிகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் போலீசாரே கொடிகளை அகற்றுவர்," என்றார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் வெள்ளிங்கிரி உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரும் விடாப்பிடியாக நின்றனர். இதையடுத்து, 'நாங்கள் அகற்ற மாட்டோம்; வேண்டுமானால் நீங்கள் அகற்றிக் கொள்ளுங்கள்' எனக் கூறிவிட்டு பா.ஜ., வினர் கலைந்து சென்றனர்.
இதையடுத்து, இரவு 7:00 மணிக்கு, கொடி கட்டவும், பிளக்ஸ் வைக்கவும் போலீசார் அனுமதி அளித்தனர்.