சூலுார்;சூலுார் திருச்சி ரோட்டில், பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள 'டிவைடர்' கற்களை எடுத்து வழி ஏற்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சூலுார் திருச்சி ரோட்டில் விபத்துகளை தவிர்க்க, ரோட்டின் நடுவில், டிவைடர் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் திரும்ப, புதிய பஸ் ஸ்டாண்ட், தனியார் மருத்துவமனை அருகே வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனை அடுத்துள்ள பெட்ரோல் பங்க் எதிரில், டிவைடர் கற்களை எடுத்து வழி ஏற்படுத்தும் பணி நடந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'திருச்சி ரோட்டில் விதிகளை மீறி டிவைடர் கற்களை எடுத்து வழி ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அந்த இடத்திற்கு தெற்கு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது.
இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படும். 4 ஆயிரம் பேருக்கு மேல் படிக்கும் தனியார் கல்லுாரிக்கு எதிரில் வழி விடாத தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், தேவையில்லாத இடத்தில் வழி ஏற்படுத்த முயல்கின்றனர்.
அந்த இடத்தில் வழி ஏற்படுத்தும் பணியை கைவிட வேண்டும்' என்றனர்.