பொன்னேரி, கொசஸ்தலை ஆறு நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடப்பதால், மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் 89 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் செயல்பாடு பாதித்து உள்ளது. இதனால், குடிநீர் உவர்ப்பாக மாறி வருவதுடன், கோடையில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு, அனுப்பம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள, 89 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது.
இந்த கிராமங்களின் குடிநீர் தேவைக்காக, பொன்னேரி அடுத்த, வன்னிப்பாக்கம், சிறுவாக்கம் ஆகிய கிராமங்களில், கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில், அத்திப்பட்டு மற்றும் அனுப்பம்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக, 47 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அவற்றின் வாயிலாக, தினமும், 27.50 லட்சம் லிட்டர் குடிநீர் உறிஞ்சப்பட்டு, மேற்கண்ட கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக, வன்னிப்பாக்கம், சிறுவாக்கம், சீமாவரம் ஆகிய பகுதிகளில் இருந்து, பைப் லைன் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யும் பணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஈடுபட்டுள்ளது.
அதேபோன்று, மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகமும், சீமாவரம் மற்றும் வன்னிப்பாக்கத்தில், 12 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அவற்றின் வாயிலாக, தினமும், 14.50 லட்சம் லிட்டர் குடிநீர் உறிஞ்சி, மீஞ்சூர் பகுதி மக்களுக்கு வினியோகம் செய்கிறது.
உவர்ப்பாக மாறிய குடிநீர்
கடந்த 2016- - 20ம் ஆண்டுகளில், கொசஸ்தலை ஆற்றில் நீர் வரத்து இல்லாமல் வறண்டதால், ஆழ்துளை கிணறுகள் செயலிழந்தன. நல்ல குடிநீருக்காக,140 அடி வரை புதிதாக ஆழ்ளை கிணறுகள் போடப்பட்டன. அதுவும் பயனின்றி போனது.
மேற்கண்ட கிராமங்கள் கோடை காலத்தில் குடிநீருக்கு தவித்தன.
கடந்த 2020ல், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நல்ல மழை பொழிவும், கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்தால், செயலிழந்து கிடந்த, ஆழ்துளை கிணறுகள் புத்துயிர் பெற்றன.
ஆழ்துளை கிணறுகளில், 80 அடியில் நல்ல குடிநீர் கிடைத்து, தட்டுப்பாடு குறைந்தது. கடந்த 2021லும், இதே நிலை தொடர்ந்தது.
மீண்டும் மாறும் நிலை
இந்த ஆண்டு, எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாதது மற்றும், பூண்டி நீர்த்தேக்க தண்ணீர் வராததால், கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் இல்லை.
தற்போது சீமாவரம் அணைக்கட்டு, வன்னிப்பாக்கம், குதிரைப்பள்ளம், அகரம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. குடிநீரின் சுவை மாறி, உவர்ப்பாகி உள்ளது.
கொசஸ்தலை ஆறு வறண்டு கிடப்பதால், ஆழ்துளை கிணறுகள் முற்றிலும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அடுத்துவரும் கோடைகாலத்தில், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து உவர்ப்பு தன்மை மேலும் அதிகரிக்கும்.
இதனால், 2016- - 2020ம் ஆண்டுகளில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறை மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், மழை நீர் நிரம்பிய பின், அவற்றின் உபரி நீர் ஆற்றிற்கு கொண்டு வருவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நடவடிக்கை
இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
வழக்கமாக பூண்டி நீர்த்தேக்கத்தின் உபரி நீர் திறக்கும்போதுதான், இந்த பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றிற்கு நீர்வரத்து இருக்கும். தற்போது பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பாத நிலையில், கொசஸ்தலை ஆற்றுக்கு நீர்வரத்து இல்லை.
மழை குறைவு என்றாலும், நிலத்தடி நீர் மட்டம் குறையவில்லை. தற்போதைய நிலையில் வன்னிப்பாக்கம் பகுதியில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் நல்ல நிலையில் உள்ளது.
கோடையில், ஆழ்துளை கிணறுகள் செயலிழப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. செயலிழக்கும் நிலையில், மாற்று இடங்களில் அவற்றை பொருத்தி, சீரான குடிநீருக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கால்வாய்களில் ஆக்கிரமிப்பு
கொசஸ்தலை ஆற்றின் அருகே உள்ள, எலவம்பேடு மற்றும் சிறுவாக்கம் ஏரிகளின் உபரி நீர் கடலுக்கு சென்று வீணாகிறது. எலவம்பேடு ஏரியில் இருந்து, கொசஸ்தலை ஆற்றிற்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் ஒன்று, சிறுவாக்கம் பகுதியில் முடிகிறது. ஒரு கி.மீ., நீளத்திற்கு உள்ள இந்த கால்வாய் துார்ந்து போய் இருக்கிறது. கால்வாய்களில் ஆக்கிர மிப்புகளும் உள்ளது. அதை முழுமையாக மீட்டு, கால்வாய் துார் வாரினால், கொசஸ்தலை ஆற்றிற்கு தண்ணீர் கொண்டு சேமிக்க முடியும். அதேபோன்று, பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பினால் மட்டும் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படுகிறது. அதுபோன்ற இல்லாமல், இந்த பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை கருதி, பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
- ஆ.பாளையம், சமூக ஆர்வலர், எலவம்பேடு, பொன்னேரி.