திருப்பூர்:தமிழகத்தில், 2021 மே, 7ம் தேதி முதல் டவுன் பஸ்களில் பெண்கள் அனைவருக்கும் இலவச பயண திட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட கல்வித்துறை தரப்பில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பகிரப்பட்டுள்ள ஒரு குறுஞ்செய்தியில்,'மாணவியருக்கான பஸ் பாஸ் விண்ணப்ப படிவத்தை போக்குவரத்து துறை வசம் சமர்ப்பிப்பதை அனைத்து தலைமை ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்; பஸ் பாஸ் வாங்க இருபாலரும் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு பெண்களுக்கு டவுன் பஸ்களில் பயணிக்க இலவசம் எனில், மாணவியருக்கும் அது பொருந்தும். அப்படியிருக்க, சி.இ.ஓ.,வின் இந்த அறிவிப்பு ஆசிரியர், பெற்றோரை குழப்பும் வகையில் உள்ளது.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வியிடம் கேட்டபோது,''பள்ளி மாணவியர் பஸ் பாஸ் பெறாமல் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது,' என்றார்.
திருப்பூர் போக்குவரத்து கழக மண்டல மேலாளர்(வணிகம்) ராஜேந்திரன் கூறுகையில்,''கல்வித்துறையில் இருந்து பட்டியல் வழங்குவோருக்கு மொத்தமாக பஸ் பாஸ் வினியோகிக்கிறோம். பஸ் பாஸ் மூலம் பயணம், இலவச பயணம் இரண்டில் எத்தனை பேர் பயணிக்கின்றனர் என்பதை தனித்தனியே அறிந்து கொள்ள தனியே விண்ணப்பிக்க அறிவுறுத்தியிருக்கலாம்,'' என்றார்.