வேலுார்: தரமற்ற சாலை அமைக்கப்பட்டதால், வேலுார் மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
வேலுார் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 1,000 கோடி ரூபாய்க்கு கால்வாய், சாலை மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது.
வேலுார் மாநகராட்சி, 59வது வார்டு அரியூர் பகுதி, அன்னை கஸ்துாரிபாய் தெருவில் கடந்த, 1ம் தேதி, 10 லட்சம் ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
தரமற்ற முறையில் அந்த சாலை அமைத்ததாக வந்த புகாரின்படி, வேலுார் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆய்வு செய்தார்.அதில், தாருடன் ஜல்லிக்கற்கள் ஒட்டாமல், நடக்கும் போதே பெயர்ந்து விழும் நிலையில் தரமற்ற முறையில் இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, பணியை சரியாக கவனிக்காத, வேலுார் மாநகராட்சி, நான்காவது மண்டல உதவி பொறியாளர் ஆறுமுகம், 45, என்பவரை, 'சஸ்பெண்ட்' செய்து கமிஷனர் அசோக்குமார் நேற்று உத்தரவிட்டார்.
அவர் மீது துறை ரீதியான விசாரணை நடக்கிறது.