தர்மபுரி : தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு, 'ஜப்தி' ஆணையுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், மாட்டலாம்பட்டியைச் சேர்ந்த நாகராஜன், 61, என்பவரின் நிலம், நான்கு வழிச்சாலை அமைக்க, 2005ல் கையகப்படுத்தப்பட்டது.
இதற்கு, 4.4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நாகராஜன், தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், நாகராஜனுக்கு, 63 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அதில், நாகராஜனுக்கு, 63 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கான வட்டியை வழங்க வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நாகராஜனுக்கு இழப்பீடு தொகையை வழங்காததை அடுத்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தை, ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நாகராஜன் நேற்று, தர்மபுரி மாவட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுபவருடன், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் வந்தார்.
மாவட்ட நிர்வாகம், நாகராஜனுடன் பேச்சு நடத்தியது.
அப்போது, இழப்பீடு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, கலெக்டர் அலுவலக ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.