நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே, ஆடு திருடிய இளைஞர்கள் பிடிபட்டனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டியை சேர்ந்தவர் ரவி; விவசாயி. இவர் தனது வீட்டின் முன் தனக்கு சொந்தமான ஆடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், அங்கிருந்த ஆட்டை திருடி பைக்கில் ஏற்றியுள்ளனர். அடுத்த ஆட்டை திருட முயன்றபோது ஆடு சத்தம் போட்டுள்ளது.
சத்தம் கேட்டு எழுந்து வந்த ரவி, தனது ஆடுகளை 2 பேர் திருடுவதை பார்த்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து திருடர்கள் இருவரையும் பிடித்தனர். தகவலறிந்த நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர், இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர்கள், கடலூர் வடுகபாளையத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் ஜீவா, 20; பாதிரிக்குப்பம் புண்ணியமூர்த்தி மகன் கலைவாணன், 21, என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஆடு மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
மேலும், நெல்லிக்குப்பம் சுற்று வட்டார பகுதிகளில் ஆடு, மாடுகள் திருட்டு போனதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.