புதுச்சேரி : கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறந்து நடத்த வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கை விடுத்துள்ளது.
ஏ.ஐ.டி.யூ.சி.,யின் 20வது மாநில மாநாடு, புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாநில செயல் தலைவர் அபிேஷகம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் தினேஷ் பொன்னையா முன்னிலை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மாநாட்டு கொடியை ஏற்றினார். அகில இந்திய துணை தலை வர் சுப்புராயன் எம்.பி., துவக்க உரையாற்றினார்.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யூ.சி., அகில இந்திய செயலாளர் வகிதா நிஜாம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் மாநாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
முன்னாள் தலைவர் நாராகலைநாதன், விவசாய தொழிலாளர் சங்க தேசிய செயலாளர் ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் ரவி, அந்தோணி, எழிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் ஜெயபாலன், துணை தலைவர்கள் கலியபெருமாள், சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலில் புலம் பெயர் தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு வாரியமாக மாற்ற வேண்டும். அனைத்து தொழில்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை காலத்திற்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும்.
புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, அண்ணா சிலை அருகில் இருந்து ஏ.ஐ.டி.யூ.சி., நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஊர்வலமாக மாநாட்டு அரங்கிற்கு வந்தனர்.