புதுச்சேரி : பிரதமர் கூறியபடி, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள கவர்னர் தமிழிசை பழக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய பா.ஜ., அரசு பேச்சுரிமை, கருத்துரி மையை நசுக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுகிறது. அந்த வகையில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை, அரசு விழா ஒன்றில் பேசும்போது, கவர்னரை மிக மோசமாக இணையத்தில் விமர்சிக்கிறார்கள். அது போல் செய்தால், இனி விமர்சிக்க முடியாத அளவு நடவடிக்கை இருக்கும் என மிரட்டியுள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் தலைவர்களுக்கு விமர்சனத்தை ஏற்கும் பக்குவம் இருக்க வேண்டும்.
மக்களை சந்தித்து அதிகாரத்துக்கு வருவோருக்கு அந்த பக்குவம் இருக்கும். அவ்வாறு வராதோருக்கு இந்த பக்குவம் இருக்காது என்பதை கவர்னர் தனது பேச்சில் உறுதியாக்கியுள்ளார். மக்களால் தேர்வாகும் அரசியல்வாதிகளுக்கு அந்த பக்குவம் இருக்கும் என்பதை அவரே அதே விழாவில் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியிடம் சுறுசுறுப்புக்கு காரணம் பற்றிய கேள்விக்கு விமர்சனத்தை சாப்பிடுவதாலே அது போல் உள்ளதாக அவர் கூறியதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கூறியபடி, விமர்சனங்களை ஏற்று கொள்ள கவர்னர் தமிழிசை பழக வேண்டும். இதன் மூலமே அவர் செல்லும் பாதை எவ்வளவு தவறானது என்பதை உணர முடியும். மாறாக விமர்சனம் செய்வோரை மிரட்டுவதை ஏற்க முடியாது. அது ஜனநாயகம், பேச்சுரிமைக்கு எதிரானது.
அரசியல்வாதிகளுக்கு எதிலும் நிதானம் தேவை என்பதை உணர்ந்து கவர்னர் விழாக்களில் பேச வேண்டும். மாறாக அடக்கு முறையை பிரயோகிக்க நினைத்தால் அது எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பதை கவர்னருக்கு வேண்டுகோளாக வைக்கிறேன். மேலும், விமர்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தனது பேச்சை, கவர்னர் திரும்ப பெற வேண்டும்.
கவர்னர் அனைத்து தகுதியோடு பொறுப்புக்கு வந்ததாக கூறியுள்ளார். அரசியல்வாதிகளுக்கு தகுதி என்பது மக்களை சந்தித்து ஓட்டு வாங்கி வெல்வது தான். கவர்னர் யாரும் அதுபோல் வென்று பொறுப்புக்கு வரவில்லை. இவர்களுக்கான எல்லையை உணர்ந்து கவர்னர்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.