சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டி கிராமத்தில், என்.எல்.சி., சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், 2 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வி.சாத்தப்பாடி, ஊ.ஆதனுார், வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களை கையகப்படுத்தி, சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சியில் என்.எல்.சி., இந்தியா நிறுவன அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 கோடி, என்.எல்.சி.,யில் நிரந்தர வேலை, குடியிருக்க வீடு மற்றும் 10 சென்ட் மனைப்பட்டா ஆகியவற்றை வழங்கினால் மட்டுமே, வாழ்வாதாரமாக திகழும் நிலங்களை தருவதாக கிராம மக்கள் உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியம் 12:00 மணிக்கு, நிலங்களை அளவீடு செய்ய என்.எல்.சி., நிறுவன அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வருவதாக தகவல் பரவியது.
இதையடுத்து, கரிவெட்டி கிராம மக்கள், நில எடுப்பு தடுப்பு சங்கத்தினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கிராம எல்லையில் திரண்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., அ.தி.மு.க., கம்யூ., உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் போராட்டம் செய்தனர்.
மதியம் 12:10 மணியளவில், போலீஸ் பாதுகாப்புடன் வந்த மாவட்ட வருவாய் அதிகாரி பூவராகன், நில எடுப்பு மாவட்ட வருவாய் அதிகாரி கிருஷ்ணன் ஆகியோர், மக்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் கிராமத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்திய கிராம மக்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அளவீடு செய்ய வந்த அதிகாரிகள்2 மணி நேரம் வரை ஊர் எல்லையிலேயே காத்திருந்து, வேறு வழியின்றி 2:00 மணியளவில் திரும்பி சென்றனர். கிராம மக்களின் போராட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.