நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பம் மற்றும் பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் அடுத்த பாகூரை சேர்ந்தவர் வைத்திலிங்கம், 73. இவர், உளுந்தூர்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரும், அவரது மனைவி சரஸ்வதியும், 65, கடலூரில் உள்ள மருத்துவமனைக்கு காரில் வந்தனர்.
காரை டிரைவர் சம்பத் ஓட்டினார். நேற்று அதிகாலை நெல்லிக்குப்பம் வாழப்பட்டு அருகே கார் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
தொடர்ந்து, அங்குள்ள வீடுகளின் முன் நிறுத்தியிருந்த மணிவண்ணன், ஞானபிரகாசம் ஆகியோரின் பைக்குகளிலும், குமரேசன் என்பவரின் கரும்பு தோகையை பொடியாக்கும் இயந்திரம் மீதும் மோதியது. இதில், பைக்குகள் மற்றும் இயந்திரம் முற்றிலும் சேதமானது.
இந்த விபத்தில் கார் டிரைவர் சம்பத், வைத்திலிங்கம், சரஸ்வதி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
சேதமான மின்கம்பத்தை, மின்வாரிய பொறியாளர் பிரமியா முன்னிலையில் ஊழியர்கள் உடனடியாக சரி செய்தனர்.