புதுச்சேரி : மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் காவலில் எடுத்து உடலை புதைத்த ஏரிக்கரையில் மூன்றாம் முறையாக தோண்டி தடயவியல் நிபுணர்களை கொண்டு சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர்,48; ரவுடியான இவர், சில வாரங்களுக்கு முன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து, உழந்தை ஏரிக்கரையில் ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டி உடலை அகற்றியதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த பாஸ்கர், தனது மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்டார். இதனால், கடந்த 2013ம் ஆண்டு சிறையில் இருந்து பரோலில் வந்து, மனைவி எழிலரசையை கொலை செய்து, கூட்டாளிகள் உதவியுடன் உழந்தை ஏரிக்கரையில் புதைத்தது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பாஸ்கர், அனிதா நகர் வேல்முருகன்,38; சரவணன்,26; சாரம் மனோகர்,32; ஆகியோரை கடந்த 22ம் தேதி கைது செய்தனர். இவர்கள், எழிலரசி உடலை புதைத்ததாக சுட்டி காட்டிய உழந்தை ஏரிக்கரையில் ஜே.சி.பி., கொண்டு பள்ளம் தோண்டினர்.
அதில், சில எலும்புகள் மற்றும் புடவையின் ஒரு பகுதி மட்டும் கிடைத்தது. கடந்த 24ம் தேதி ஸ்கூபா வீரர்கள் இருவரை கொண்டு உழந்தை ஏரியில் மீண்டும் தேடும் பணி நடந்தது. அதில், உடைந்த மொபைல் போன் மட்டும் கிடைத்தது.
இந்நிலையில், டி.என்.ஏ., சோதனைக்கு போதிய எலும்புகள் இல்லாததால், மீண்டும் உழந்தை ஏரிக்கரையில் பள்ளம் தோண்டி சோதனை செய்ய முடிவு செய்தனர்.
அதனையொட்டி, சிறையில் அடைக்கப்பட்ட பாஸ்கர் உள்ளிட்ட 4 பேரையும், முதலியார்பேட்டை போலீசார், கோர்ட் அனுமதி பெற்று நேற்று முன்தினம் மூன்று நாள் காவலில் எடுத்தனர்.
அவர்கள் நேற்று உழந்தை ஏரிக்கரையில் சுட்டிக் காட்டிய இடத்தை தாசில்தார் குமரன், எஸ்.பி., ரவிக்குமார், தடயவியல் நிபுணர் விஜயக்குமார், அரசு டாக்டர் ராஜேஷ், இன்ஸ்பெக்டர் இனியன் ஆகியோர் முன்னிலையில் ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டி தேடினர். காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடந்த தேடும் பணியில் சிறு, சிறு எலும்புகள் மட்டுமே சிக்கியது. டி.என்.ஏ., சோதனைக்கு ஏற்ப பெரிய எலும்புகள் எதுவும் சிக்காததால், தேடும் பணி இன்றும் மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.