புதுச்சேரி : புதுச்சேரியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1.71 லட்சம் ரொக்கம், மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி, பெரியக்கடை போலீசார் நேற்று முன்தினம் மாலை அண்ணா சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, நடைபாதையில் நின்றிருந்த இருவர், போலீசாரை கண்டதும் பதுங்கினர்.சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்கள் கட்டு கட்டாக கேரள மாநில லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தனர்.
விசாரணையில், கடலுார் பாதிரிக்குப்பத்தை சேர்ந்த வரதராஜ்,48; பாலுார் அடுத்த குயிலாப்பாளையத்தை சேர்ந்த சண்முகம்,50; என்பதும், இருவரும் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வரவழைத்து புதுச்சேரியில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார், இருவரிடம் இருந்து லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.1.71 லட்சம் ரொக்கம், 2,430 லாட்டரி சீட்டுகள் மற்றும் 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், இருவர் மீதும் வழக்கு பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.