புதுச்சேரி : விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் புவனேஷ்,29; இவரது நண்பர் பாகூரை சேர்ந்த அருண்,28; இருவரும் கடந்த 4ம் தேதி அதிகாலை 2.00 மணிக்கு பைக்கில் புதுச்சேரி, நேரு வீதியில் சென்றனர். பைக்கை புவனேஷ் ஓட்டினார். அப்போது, புதுச்சேரி வெள்ளாள வீதியை சேர்ந்த டாக்டர் தயாநிதி,34; ஓட்டி வந்த கார், பைக் மீது மோதி கவிழ்ந்தது.
விபத்தில், காரில் வந்த டாக்டர் தயாநிதி உள்ளிட்ட மூவர் மற்றும் பைக்கில் வந்த புவனேஷ், அருண் ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று காலை 8 மணிக்கு, டாக்டர் உள்ளிட்ட மூவரை மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனேஷ், நேற்று காலை 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனை அறிந்த புவனே ஷின் உறவினர்கள், நண்பர் கள் ஆகியோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, விபத்து ஏற்படுத்தியவரை மேல்சிகிச்சைக்கு அனுப்பிய நிலையில், புவனேைஷ, மேல் சிகிச்சைக்கு ஜிப்மருக்கு அனுப்பாததைக் கண்டித்து கோஷமிட்டனர். மேலும், புவனேஷ் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். விபத்துக்கு காரணமானோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களிடம் பெரியக்கடை போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.
முற்றுகை போராட்டத்தால் 20 நிமிடம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.